தினேஷ் கார்த்திக்
by CricketArchive


Player:KD Karthik

DateLine: 18th August 2008

 

முழுப்பெயர்: கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்திக்.

 

பிறப்பு: 1 ஜூன் 1985. மெட்ராஸ் (தற்போது சென்னை) தமிழ்நாடு, இந்தியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: மட்டை வீச்சாளர் , விக்கெட் கீப்பர்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, இந்தியா பிரெசிடென்ட் லெவன், இந்தியா ஏ, இந்தியா ப்ளூ, தமிழ்நாடு, டெல்லி டேர் டெவில்ஸ், 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி.

 

அறிமுகம்:

டெஸ்ட் போட்டி: நவம்பர் 3-5, 2005, இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: செப்டம்பர் 5, 2004 அன்று இந்தியா - இங்கிலாந்து இடையே லார்ட்ஸில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: டிசம்பர் 1, 2006 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இந்திய அணியின் மற்றொரு இளம் விக்கெட் கீப்பர். அதிரடி ஆட்டக்காரர். இளம் வயதில், அணிக்கு வந்தவர். இவர் சற்றே உயரம் குறைந்து காணப்பட்டாலும், பேட்டிங்கில் அசத்துபவர். கீப்பிங் பணியிலும் சிறப்பாக செயல்படுபவர்.

 

இந்தியாவின் தென்கோடியிலுள்ள தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிறந்தவர். 10 வயதிலிருந்தே கிரிக்கெட்டை விளயாட ஆரம்பித்தார். இவர் கிரிக்கெட் விளையாடுவதை இவரது தந்தையான கிருஷ்ணகுமாருக்கு பிடிக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்து என்று கடிந்து கொண்டார். பிறகு மகனின் ஆர்வத்திற்கு தடைபோடாமல் தினேஷ் கார்திக்கை ஊக்கப்படுத்தினார். மகன் பேட்டிங் பயிற்சி செய்வதற்கு இவரே பந்துவீசியுள்ளார்.

 

முதலில் பேட்ஸ்மேனாக இருந்த தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காகவும், எதிர்கால நலன் கருதியும் விக்கெட் கீப்பராக மாறினார் .

 

தமிழ்நாடு அணி சார்பில், 2002-ல் முதல்தரப்போட்டியில் அறிமுகமானார். விக்கெட் கீப்பராகவும், அணியில் 8-வது வீரராகவும் களமிறங்கினார். இதில், மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி 179 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, 11 பேரை தனது திறமையான பிடி(Catch)யால் வெளியேற்றினார். உத்திரபிரதேச அணிக்கெதிராக 88 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போட்டியில் தமிழ்நாடு அணியில் இவர்தான் அதடிகபட்ச ரன்களை குவித்தார்.

 

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான கிரண் மோரேவிடம் விக்கெட் கீப்பிங் குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டார். இது அவரது ஆட்டநுணுக்கத்திற்கு உதவியாக இருந்தது. இதையடுத்து 2003-04 ல் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடினார்.

 

இப்போட்டி தொடரில் இரண்டு சதங்கள் உள்பட 438 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, 20 பேரை தனது திறமையான பிடி(Catch)யால் வெளியேற்றினார்.

 

இதன் பிறகு 2004- ல் வங்கதேசத்தில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அப்போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 39 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார்.

 

இதனால் இந்திய தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்தார். அதன் விளைவாக ஆகஸ்ட், 2004-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், அப்போதைய விக்கெட் கீப்பரான பார்தீவ் படேலுக்கு பதிலாக இடம்பிடித்தார். இத்தொடரில் சிறப்பாக விளையாடினார்.

 

செப்டம்பர் 5, 2004 அன்று இந்தியா - இங்கிலாந்து இடையே லார்ட்ஸில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் முதன் முதலாக சர்வதேச ஒருதினப் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக, நவம்பர் 3-5, 2005, இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மும்பையில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார்.

 

பத்து டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு முதல் அரை சதத்தை கடந்தார். மஹேந்திரசிங் வருகையால், இவர் அணியிலிருந்து விலக்கப்பட்டார். 2006-ல் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்தார்.

 

2007 உலககோப்பை போட்டி தோல்விக்குப்பிறகு வங்கதேச சென்ற இந்திய ஒருதின அணியிலும், டெஸ்ட் போட்டியிலும் இடம்பிடித்தார். இத்தொடரில் டெஸ்ட் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடினார். இந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளில் முதலாவது சதத்தைக் கடந்தார்.

 

இதே ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்து துவக்க ஆட்டக்காரராக விளையாடினார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

 

இலங்கையில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் தோனி ஓய்வு காரணமாக விலகினார். இதானால் மீண்டும் தினேஷ் கார்திக் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடினார்.

 

தற்போது இந்திய ஏ அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய ஏ, நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்புத் தொடரில் விளையாடி வருகிறார்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08